உலக சாதனை நிகழ்வாக 10 லட்சம் மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க தமிழக அரசால் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தலைமைச்செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டது.
மேலும் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்க மாநில அளவிலான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை (லோகோ) அறிமுகம் செய்து, www. plasticpollutionfreetn.org என்ற வலைதளத்தையும், Plastic Pollution Free Tamil Nadu என்ற செல்போன் செயலியையும் (‘ஆப்’) முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு 23-ந்தேதி தொடங்கி வைத்தார்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்றுப்பொருட் கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, நடமாடும் விழிப்புணர்வு பிரசார வாகன சேவையையும் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஒருமுறை மட்டுமே பயன் படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்தபின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூன் 17-ந்தேதி விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ‘கிரீன் லைப்’ தொண்டு நிறுவனம் இணைந்து, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற இயக்கத்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், குழந்தைகள் தினமான நேற்று உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள், ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் பிறகு முதல்-அமைச்சர், குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.