சென்னையில் காற்று மாசு: பனி போல் படர்ந்து இருப்பதால் மக்கள் அவதி

சென்னையில் காற்று மாசு காலை மாலை என இருவேளையிலும் பனி போல் படர்ந்து இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2019-11-10 10:07 GMT
சென்னை,

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரமாக காற்று மாசு நீடித்து வருகின்றன. காலை வேளையில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் நடை பயிற்சி செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் மதிய வேளையிலும் காற்று மாசு பனி போல் படர்ந்து இருப்பதை காண முடிகிறது.

தமிழகத்தில் வடக்கில் இருந்து காற்று வீசுவதால் அங்குள்ள மாசுக்கள் அனைத்தும் வட தமிழகத்தை நோக்கி வந்துள்ளன. இதனால் சென்னையில் பனியும், புகையும் சேர்ந்து காணப்படுகிறது.

காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு பி.எம்.10, பி.எம்.2.5 என்று வகைப்படுத்தப்படுகிறது. இதில் காற்றில் மிதக்கும் நுண் துகள்கள் பி.எம். 2.5&ன் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமைவிட கடந்த 3-ந்தேதி முதல் அதிகரித்து வருகிறது. 

காற்று தர குறியீடு புள்ளிகள் (பி.எம்.2.3) 50 வரை இருந்தால் சுவாசிக்க ஏற்க கூடியது. 50 முதல் 100 வரை இருந்தால் மோசமானதாகும்.

101-150 வரை மிக மோச மானதாகும். 151- 200 வரை சுவாசிக்க முடியாத அளவு, 201-300 வரை மிக மோசமான அளவு, 301-500 புள்ளிகள் வரை அபாயம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் நேற்று டெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகரித்து இருந்ததாக தனியார் காற்று தர ஆய்வில் தெரிய வந்தது. 

நேற்று காலை நிலவரப்படி மணலியில் 209 புள்ளிகளும், கொடுங்கையூரில் 307 , அண்ணாநகர் 239, ராமாவரத்தில் 276, ஆலந்தூரில் 156, வேளச்சேரியில் 139, கோவிலம்பாக்கத்தில் 139 புள்ளிகளாக பதிவானது.

இன்று காலை நிலவரப்படி வேளச்சேரியில் 256 ஆகவும், ஆலந்தூரில் 257 ஆகவும் இருந்தது. ஆனால் டெல்லியில் 235 புள்ளிகளாகவே பதிவாகி இருந்தது. காற்று மாசு காரணமாக மணலி, எண்ணூர் உள்ளிட்ட வட சென்னை பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.  மழை பெய்ய தொடங்கினால் காற்று மாசு குறைய தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்