இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பதவியேற்பு
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற முத்தமிழ்ச்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை,
தமிழக சட்டசபையில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நாங்குநேரி, தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் , விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடு வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்க உள்ள ரெட்டியார்பட்டி நாராயணன் , முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் இருவரும் பதவியேற்றுக்கொண்டனர். இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124ஆக உயர்ந்தது.