மாமல்லபுரம் விழாக்கோலம்: குண்டு துளைக்காத அரங்கில் மோடி - சீன அதிபர் சந்திப்பு
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசுவதற்கு குண்டு துளைக்காத வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்,
சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்.
நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.
வழிநெடுக 34 இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு சீன அதிபருக்கு பிரமாண்டமான அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
பிரதமர் மோடியும் நாளை சென்னை வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்குகிறார். நாளை மாலை 4.55 மணி அளவில் மாமல்லபுரம் சென்றடையும் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார். இருவரும் ஒன்றாக மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சிற்பங்களை பார்வையிடுகிறார்கள்.
முதலில் அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைபாறை ஆகியவற்றை பார்த்து ரசிக்கும் இருவரும் பின்னர் காரில் புறப்பட்டு ஐந்து ரதம் இருக்கும் பகுதிக்கு செல்கிறார்கள்.
ஐந்து ரதத்தை பார்வையிட்ட பிறகு மாலையில் கடற்கரை கோவில் அருகில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
கடற்கரையில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்திலேயே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக மாமல்லபுரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை கோவிலின் பின்புலத்தில் இருவரும் தனியாக அமர்ந்து பேசுவதற்கும் கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதற்கும் தனியாக கூம்பு வடிவிலான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் செவ்வக வடிவில் இன்னொரு அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரங்கத்தில் சீனாவில் இருந்து வரும் உயர் அதிகாரிகளும், அதி முக்கிய பிரமுகர்களும் அமர உள்ளனர்.
இந்த இரண்டு அரங்குகளும் குண்டு துளைக்காத வகையில் பலத்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலுவான அலுமினிய தகடுகளும் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் மூலமாக இரண்டு அரங்குகளும் அழகுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து தான் சீன அதிபரும், பிரதமர் மோடியும் அங்கு நடைபெறும் நடன நாட்டிய நிகழ்ச்சிகளை ரசிக்கிறார்கள். சீன அதிபருக்கு தேனீர் விருந்தும், இரவு விருந்தும் அளிக்கப்படுகிறது.
கலாசேத்ரா குழுவினர் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தின் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக சீன அதிபரும், பிரதமரும் அமரும் குண்டு துளைக்காத அரங்குக்கு எதிரில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கண்ணை கவரும் வகையில் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.
இந்த மேடையின் அருகில் மத்திய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் அமருவதற்காக தனி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
சீன அதிபரின் வருகைக்கு சென்னையில் உள்ள திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தீவிரவாதிகள் மிரட்டலும்
உள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்
ளது. கிண்டியில் சீன அதிபர் தங்கும் நட்சத்திர ஓட்டலையும், கோவளத்தில் பிரதமர் மோடி தங்கும் ஓட்டலையும் சீன மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீன அதிபர் காரிலேயே பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக அவர் பயணம் செய்யும் ஜி.எஸ்.டி. சாலை, அண்ணாசாலை, சர்தார்வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை,
கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் சென்னை மற்றும் மாமல்லபுரம் போலீசார் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பணிகளில்
ஈடுபட்டுள்ளனர்.
சென்னை விமானநிலையத்தில் இருந்து கிண்டி சோழா வரையிலும், அங்கிருந்து மாமல்லபுரம் வரையிலும் சீன அதிபரை பாதுகாப்புடன் அழைத்து செல்வது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகையும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சாலை ஓரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகள் ஆகியவற்றின் உரிமையாளர்களையும் அழைத்துபேசி ஒத்துழைப்பு தருமாறு கேட்டுள்ளனர். இதன்படி குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் மாமல்லபுரம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சீன அதிபர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்து தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ஓட்டலில் தங்க உள்ளார்.
மறுநாள் (12-ந்தேதி) காலை 9 மணியளவில் சீன அதிபர் காரில் புறப்பட்டு பிரதமர் மோடி தங்கியுள்ள கோவளம் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு இருவரும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதன் பிறகு சீன அதிபருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்குள் இருவரது நிகழ்ச்சிகளும் முடிவடைகின்றன. இதன் பின்னர் சீன அதிபர் சென்னையில் இருந்து புறப்பட்டு நேபாளம் செல்கிறார். பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.