சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ரூ.1கோடி இழப்பீடு கோரி தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் மனு
பேனர் விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பணி முடிந்து சுபஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அவர் சென்ற போது அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவிலும், ஓரமும் ‘பேனர்’கள் வைத்து இருந்தனர்.
சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் கோவிலம்பாக்கம் நோக்கி வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது. தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். ‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில், சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனிடையே கடந்த மாதம் 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒரு தனிப்படை கிருஷ்ணகிரி, ஒகேனக்கல் பகுதியில் தேடி வந்த நிலையில் தலைமறைவான ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ‘பேனர்’ விழுந்து பலியான சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சுபஸ்ரீ மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், ‘பேனர்’ வைப்பதை தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றவும் வலியுறுத்தியிருக்கும் ரவி, தனது மகள் மரணத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.