மணிரத்னம், ரேவதி உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ரத்துசெய்ய வேண்டும் கமல்ஹாசன் வேண்டுகோள்
மணிரத்னம், ரேவதி உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யவேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான வன்முறை சம்பவங்களை கண்டித்தும், இந்த விவகாரங்களில் உடனடி தலையீடு வேண்டும் என்றும் கடந்த ஜூலை 23-ந்தேதி சினிமா இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, நடிகர் அனுராக் காஷ்யாப், தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூக ஆர்வலர்கள் ஆஷிஷ் நந்தி உள்பட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.
இக்கடிதம் நாட்டின் நற்பெயரை கெடுப்பதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி பீகாரை சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தேசத்துரோக வழக்கு
இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் கடந்த 4-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
பீகார் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கமல்ஹாசன் வேண்டுகோள்
இணக்கமான இந்தியாவை பிரதமர் விரும்புகிறார். நாடாளுமன்றத்தில் பிரதமரின் அறிக்கைகளும் அதையே உறுதி செய்கின்றன. அதை மாநிலங்களும், அதன் சட்டங்களும் பின்பற்ற வேண்டாமா? பிரதமரின் ஆசைக்கு முரணாக என் சக கலைஞர்கள் 49 பேர் மீது தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்கள். சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் பீகாரிலிருந்து போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.