தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் நடக்கும் வன்முறையை கண்டித்தும், இதில் பிரதமர் நரேந்திரமோடி தலையிடக்கோரியும் திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்கள்.
அந்த கடிதத்தில் கும்பல் வன்முறை நடத்தப்படுகின்றன. அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதம் விவகாரம் தொடர்பாக பீகார் போலீசார் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து திரைபிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநரான பாரதிராஜா, கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும், பொதுவெளியில் பேசக் கூடாது என்று அச்சுறுத்துவது ஏற்கத்தக்கதல்ல. பொய் வழக்கு மூலம் மாற்றுக் கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வது ஏற்கத்தக்கதல்ல. இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.