நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பணம் கொடுத்து வெற்றி பெற திமுக முயற்சி - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-10-07 14:26 GMT
சென்னை,

சென்னையில்  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தப் பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் பதவியில் பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து கூறினேன்.

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் மக்கள் செல்வாக்கோடு அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப்பெறுவார்கள்.  நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், பிரதமருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் முயற்சியால் மேகதாதுவில் அணைகட்டும் முடிவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் என வந்தவுடனேயே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். காலம் தாழ்த்தி செல்ல வேண்டாம். கீழடியில் அருங்காட்சியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்