தசரா திருவிழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 10-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) இரவில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பங்கேற்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.;

Update: 2019-10-06 22:45 GMT
குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

தினமும் மாலையில் கோவில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடக்கிறது. தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்தநடராஜர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

8-ம் நாளான நேற்று காலை முதல் இரவு வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் கோவில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பரத நாட்டியம் நடந்தது. இரவில் அம்பாள் கசலட்சுமி திருக்கோலத்தில் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 9-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) இரவு கலைமகள் திருக்கோலத்தில் அம்பாள் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அளிக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக் கான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திரும்பிய பக்கமெல்லாம் பல்வேறு சாமி வேடம் அணிந்த பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

11-ம் நாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடைபெறும். 12-ம் நாளான 10-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்