அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா - பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

Update: 2019-10-06 10:35 GMT
சென்னை,

மத்திய அரசின் ‘ராஷ்டிர அவிஷ்கார் அபியான்’ திட்டத்தின் கீழ், தமிழக பள்ளி மாணவர்கள் 4 ஆயிரத்து 560 பேரை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் 960 மாணவர்களையும், 9 ஆம் வகுப்பு பயிலும் 3,600 மாணவர்களையும் 4 மண்டலங்களாக பிரித்து 3 நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், மைசூர், திருப்பதி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு பல கட்டமாக மாணவர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.

இந்திய ரெயில் போக்குவரத்து துறையுடன் இணைந்து ரெயில்களிலும் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பாக 72 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், பெற்றோரின் உரிய அனுமதி பெற்ற பின் மாணவ, மாணவியரை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் மாணவர்களின் கல்விச்சுற்றுலா விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்களை பயணம் முடிந்த உடன் தொகுப்பு அறிக்கையாக தயாரித்து இயக்குநரகத்துக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்