8-ந்தேதி முதல் பதிவு செய்யலாம்: போலீஸ் பணிக்கான உடல்திறன் தேர்வுக்கு இலவச பயிற்சி சைதை துரைசாமி அறிவிப்பு
சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தின் சார்பில் போலீஸ் உடல் தகுதித்தேர்வு, உடல்திறன் போட்டிக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 8-ந்தேதி முதல் பதிவு செய்யலாம்.
சென்னை,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி தலைமையில் சென்னை சி.ஐ.டி.நகரில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடும், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று மாநில அரசின் உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கோடும் கடந்த 14 ஆண்டுகளாக இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 3,389-க்கும் மேற்பட்டோர் இங்கு பயிற்சி பெற்று மத்திய, மாநில அரசின் பணிகளில் இருக்கின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் தமிழ்நாடு போலீஸ் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 8,888 இடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடல்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டி நடைபெற உள்ளது. அதற்கான இலவச பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் அளிக்க உள்ளது.
உடல்தகுதி தேர்வில் தேர்வு பெற ஆண்கள் 1,500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களிலும், பெண்கள் மற்றும் திருநங்கைகள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளிலும் ஓடி முடிக்க வேண்டும்.
உடல்திறன் போட்டியில் ஆண்கள் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம், பெண்கள் நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு குறைந்தபட்சம் ஒரு நட்சத்திர திறன் பெற வேண்டும்.
குறிப்பிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு தேர்வு பெறுவதற்காக மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பு பயிற்சியை இலவசமாக வழங்குகிறது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மனிதநேயம் பயிற்சி மையத்தில் நேரிலோ அல்லது www.mntfree.ias.com என்ற இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி தெரிவித்து உள்ளார்.