திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை

திருமணம் செய்ய பெண் கிடைக்காததால் மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2019-10-04 21:55 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வில்லியநல்லூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜேஷ்குமார் (வயது 27). இவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாலியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-ம் அணியில் 2-ம் நிலை காவலராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ராஜேஷ் குமாருக்கு, அவருடைய குடும்பத்தினர் பெண் பார்க்க தொடங்கினர். ஆனால் அவருடைய ஜாதகத்தில் தோஷம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ்குமார் வில்லியனூர் வந்தார். பின்னர் இரவில் அவர் தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று, மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே நேற்று காலையில் ராதாகிருஷ்ணன், மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அங்கு ராஜேஷ்குமார் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுபற்றி புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஷ்குமாரின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்