கல்லூரி பஸ் மோதி 7 மாணவிகள் படுகாயம் - பொதுமக்கள் ஆவேசத்தில் பஸ்களை அடித்து நொறுக்கினர்
பெரம்பலூர்அருகே அரசு பள்ளி மாணவிகள் மீது கல்லூரி பஸ் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் ஆவேசத்தில் பஸ்களை அடித்து நொறுக்கினர்.
பெரம்பலூர்,
அந்த கிராமத்தில் இருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சித்தளி பஸ் நிறுத்தத்தில் இருந்து அவர்கள் பஸ் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 8 மணி அளவில் சித்தளி கிராமத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் பள்ளிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு திண்ணையில் 12 மாணவிகள் அமர்ந்து அரசு பஸ்சுக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் தனியார் கல்வி நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரியின் 2 பஸ்கள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளியின் பஸ் ஆகியவை அரியலூர், குன்னம் பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்தன. அந்த 3 பஸ்களின் டிரைவர்களும் குன்னத்தில் இருந்து பெரம்பலூருக்கு யார் முதலில் செல்வது? என்று போட்டி போட்டுக்கொண்டு வேகமாக பஸ்களை ஓட்டி வந்தனர்.
மெட்ரிகுலேசன் பள்ளி பஸ், சித்தளி பஸ் நிறுத்தத்தில் மாணவ- மாணவிகளை ஏற்றி கொண்டு புறப்பட தயாரானது. அதன்பின்னால் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் வந்தது. இதற்கிடையில் அதே கல்வி நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு பஸ்சின் டிரைவர், முன்னால் செல்கிற 2 பஸ்களையும் முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், பஸ்சை வேகமாக இயக்கி வந்தார். அப்போது 2 பஸ்களையும் முந்திக்கொண்டு வேகமாக சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சித்தளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள விநாயகர் கோவில் முன்புள்ள மின்கம்பம் நோக்கி வேகமாக சென்றது. இதனை கண்ட, கோவில் திண்ணையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள் எழுந்து ஓட முயன்றனர். அதற்குள் பஸ் மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி,
பஸ் மோதியதில், 7 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மற்ற மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் டிரைவரான குன்னம் சடைக்கன்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 24) மற்றும் அதே கல்வி நிறுவனத்தை சேர்ந்த மற்ற பஸ்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த காயத்ரி(14), சரண்யா(14), அகல்யா(14), செந்தாமரை(14), ராதிகா(14), கோமதி(14), ரம்யா(17) ஆகிய 7 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சுகள் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் ஆவேசமடைந்த பொதுமக்கள், விபத்துக்குள்ளான பஸ்சையும், அந்த இடத்தில் இருந்த மற்ற 2 பஸ்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் ஒன்றை பள்ளத்தில் தள்ளினர். பஸ்களில் இருந்த மாணவ- மாணவிகள் முன்கூட்டியே இறங்கியதால் அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
கல்வி நிறுவனத்தின் பஸ் டிரைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், தனியார் கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அதே கல்வி நிறுவனத்தை சேர்ந்த பஸ்களை மறித்து, அதிலிருந்த மாணவ- மாணவிகளை இறக்கி விட்டு, பஸ்களை அடித்து நொறுக்கினர். அந்த பஸ்களின் டிரைவர்கள் அங்கிருந்து அலறி அடித்து தப்பி ஓடினர். மொத்தம் 15 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நிஷாபார்த்திபன் (பெரம்பலூர்), சீனிவாசன் (அரியலூர்) மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பொதுமக்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்கள் முதலில் கலைந்து செல்ல மறுத்தனர். சம்பந்தப்பட்ட டிரைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதை தொடர்ந்து மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை போக்குவரத்து பாதிப்படைந்தது.