திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: தப்பியோடிய 2-வது நகை கொள்ளையன் கைது

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தப்பியோடிய 2-வது நகை கொள்ளையன் சிக்கினான்.

Update: 2019-10-04 15:30 GMT
திருச்சி,

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டிடத்துக்குள் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது. ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு சுவரில் துளையிட்டு மிக நிதானமாக அங்குலம், அங்குலமாக நகை ரேக்குகளைத் திறந்து நகைகளை எடுத்து பையில் போடும் காட்சி கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

கொள்ளையர்கள் எவ்வித அடையாளத்தையும், சிறிய தடயத்தையும் கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளையில் வடமாநிலக் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் கருதினர். அதை நோக்கி விசாரணை நகர்ந்த நிலையில் நேற்று நடந்த வாகனச் சோதனையில் திருவாரூர் அருகே மடப்புரம் மணிகண்டன் என்பவன் சிக்கினான்.

அவனுடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் என்பவன் தலைமறைவானான். அவர்களிடமிருந்து 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. சீராத்தோப்பு சுரேஷ் குறித்த தகவல்களை போலீசார் விசாரித்தபோது அவர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி மற்றும் உறவினர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், நகைக்கடை கொள்ளையில் தப்பியோடிய சீராதோப்பு சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். பிடிபட்ட சுரேஷிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகை கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2-வது நாளில் குற்றவாளிகள் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்