ரிப்பன் கட்டிடம் அருகே நவீன வசதிகளுடன் உலகத்தரத்திலான பூங்கா மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு

ரிப்பன் கட்டிடம் அருகே பல்வேறு நவீன வசதிகளுடன் உலகத் தரத்திலான பூங்கா அமைக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-10-03 19:30 GMT
சென்னை,

சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் 2 அடுக்குகளை கொண்ட ரெயில் நிலையமாகும். இந்த ரெயில் நிலையத்தை தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு வரும் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கும், பொழுதை கழிப்பதற்காகவும் புதிதாக உலகத்தரத்திலான நவீன பூங்கா ஒன்றை அமைக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

பல்வேறு நவீன வசதிகளுடன் இந்த பூங்கா அமைய உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோரி உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இதற்கான பணிகளையும் விரைவாக தொடங்கவும் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. இதன் அருகே ரூ.400 கோடி செலவில் 20 மாடிகளுடன் கூடிய பிரமாண்ட வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த வணிக வளாகம் ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், சென்ட்ரல் ரெயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு மத்தியில் அமைக்கப்படும்.

இதில் வாகன நிறுத்துமிடம், பயணிகள் சுரங்கப்பாதைகள் என பல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பூமிக்கடியில் 3 அடுக்கில் அமைய உள்ள கார் நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 800 கார்களை நிறுத்த முடியும்.

இதன் அருகிலேயே பஸ் நிறுத்தும் இடங்கள், கடைகள் மற்றும் அலுவலக இடங்கள் இடம் பெற உள்ளன. இந்த வணிக வளாகம் புறநகர் ரெயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து என அனைத்தையும் இணைக்கும் வகையில் அமைய உள்ளது.

இந்த திட்டத்திற்கு முன்பாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேல் பகுதியில் அதாவது ரிப்பன் கட்டிடம் மற்றும் மூர்மார்க்கெட் வளாகங்களுக்கு எதிரில் உள்ள பாதையில் உலகத்தரத்தில் பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது.

இந்த பூங்காவில் பயணிகள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கும், பொழுதை கழிப்பதற்கு வேண்டிய பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கான இருக்கைகள், மரக்கூரை, புல்வெளி, பாதசாரிகளுக்கு தேவையான வசதிகள், இயற்கை காட்சிகள், நீருற்றுகள் என பல்வேறு நவீன வசதிகள் பூங்காவில் இருக்கும்.

தற்போது பொதுமக்கள் செல்வதற்காக இரண்டு புதிய சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. பூங்காவில் இருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை இணைக்கும் வகையில் நடைபாதைகள் மற்றும் 2 புதிய சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.

இந்தப்பணிக்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் கோரும் நிறுவனம் 17 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்