நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : சுவர் ஓவிய தொழிலாளர்கள் மகிழ்ச்சி

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

Update: 2019-10-02 10:28 GMT
கன்னியாகுமரி,

நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் சின்னம், வேட்பாளர் பெயர், கொள்கைகள் உள்ளிட்ட பலவற்றையும் சுவர் ஓவியங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வந்தனர். 

அதன் பின்னர் போஸ்டர், பேனர் போன்றவற்றை பயன்படுத்தி விளம்பரப்படுத்த தொடங்கினர். இதனால் சுவர் ஓவியங்கள் வரையும் வழக்கம் குறைந்து போனது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னையில் முறையான அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பலியான பிறகு, அனுமதியின்றி பேனர் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இதனையடுத்து தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக மீண்டும் சுவர் ஓவியங்கள் வரையும் வழக்கத்தை பின்பற்ற தொடங்கியுள்ளனர். அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 

கிராமங்களில் வீட்டின் உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கட்சித்தலைவர்களின் பெயர், தேர்தல் நாள் மற்றும் சாதனைகள் அந்த சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளன. இதனால் சுவர் விளம்பரங்கள் எழுதும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்