கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
சென்னை,
சென்னை கொடுங்கையூரில் 45 மில்லியன் லிட்டர், கோயம்பேடு பகுதியில் 45 மில்லியன் லிட்டர், நெசப்பாகத்தில் 10 மில்லியன் லிட்டர், பெருங்குடியில் 10 மில்லியன் லிட்டர் என, நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப் படும்.
இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் 9 நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நன்னீர் பொதுமக்களின் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் என்ற செய்தியை தெரிவிக்கவிரும்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் எப்பொழுது தொடங்கும்?.
பதில்:- விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தப் பணி நிறைவு பெற்றவுடன் 400 மில்லியன் லிட்டர் பேரூரில் உருவாக்குவதற்கு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலம் சுமார் 876 மில்லியன் லிட்டர் நீர் சென்னை மாநகர மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை போக்குவதற்கு வழங்கப்படும்.
கேள்வி:- கிருஷ்ணா நதிநீரை குழாய் மூலம் கொண்டு வருவோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், பாலாற்றில் தடுப்பணைகளை உயர்த்திக்கொண்டு வருகிறார்கள் என்ற பிரச்சினை இருக்கிறதே?.
பதில்:- ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, அந்த ஒப்பந்தத்தை மீறி அவர்கள் தடுப்பணையை உயர்த்துகின்றார்கள். தடுப்பணையை உயர்த்தக்கூடாது, புதிய தடுப்பணை கட்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருக்கின்றது. வழக்கு வருகின்றபொழுது, அதற்கு தீர்வு காணப்படும்.
கேள்வி:- அண்டை மாநிலங்களுடன் இணக்கமாக இருக்கும் ஒரு நடவடிக்கையாகத்தான் கேரள முதல்-மந்திரியை நீங்கள் சந்தித்தீர்கள், அதேபோல் ஆந்திர முதல்-மந்திரியையும் சந்திப்பீர்களா?.
பதில்:- அண்டை மாநிலங்களோடு சுமுகமான உறவு இருக்கின்ற விதமாகத்தான் கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்காகக்கூட, உள்ளாட்சித் துறை அமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும் நேரடியாகச் சென்று ஆந்திர முதல்-மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தவுடன், உடனடியாக, சென்னை மாநகர மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து, அதற்கான நடவடிக்கையை எடுத்து தண்ணீர் திறக்கப்பட்டு, கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருக்கிறது.
கேள்வி:- நாம் கோதாவரி நீர் பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா?.
பதில்:- மத்திய அரசு இந்தத் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறது. அந்த அடிப்படையில் ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின்படி, அப்போது நீர்வளத் துறை மந்திரியாக இருந்த நிதின் கட்காரி இந்தத் திட்டத்தை, அப்பொழுதே துவக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆகவே, கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் என்பது தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக இணைத்துத்தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசால் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மத்திய அரசு செயல்படுத்துகின்ற திட்டம். தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களால் அவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று நாமும் தெரிவித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் ஒன்றாகச் சேர்ந்து கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பயனடையும். அதுமட்டுமல்ல, இந்தத் திட்டம் நிறைவேறுகின்றபோது, நம்முடைய பாசனப் பரப்பு ஓரளவு விரிவடையும்.
கேள்வி:- பிரதமரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் “நடந்தாய் வாழி காவிரி திட்டம்” தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறீர்கள், அந்தத் திட்டம் எப்பொழுது தொடங்கும்?.
பதில்:- நாங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்து பத்திரிகைகளிலும் தெளிவாக வந்துள்ளது. எங்களுடைய எண்ணங்கள் எல்லாம், தமிழகத்தில் பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீர் முழுவதையும் சேமித்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நீர் மேலாண்மைத் திட்டம் மூலமாக தொடர்ந்து செயலாற்றி எங்களுடைய அரசு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. அதேபோல், அண்டை மாநிலங்களில் இருந்து, கோதாவரி - காவிரி போன்ற திட்டங்களின் மூலமாக தண்ணீரை, விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஈடேறுகின்ற விதத்தில், அ.தி. மு.க. அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.