அந்தியூர் அருகே மனைவி இறந்த வேதனையில் கணவரும் சாவு: மரணத்திலும் இணைபிரியாத வயதான தம்பதி

அந்தியூர் அருகே மனைவி இறந்த வேதனையில் கணவரும் இறந்தார். மரணத்திலும் இணை பிரியாத தம்பதியால் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Update: 2019-09-08 20:30 GMT
அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 83), தொழிலாளி. இவருடைய மனைவி காமாட்சி அம்மாள் (78). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் பழனியப்பனும், காமாட்சி அம்மாளும் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக இவர்கள் 2 பேரும் வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவ்வப்போது அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காமாட்சி அம்மாள் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவருடைய கணவர் பழனியப்பன் கதறி அழுததோடு, மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

பின்னர் அவரும் சிறிது நேரத்தில் திடீரென இறந்துவிட்டார். மரணத்திலும் இணை பிரியாத தம்பதியால் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்