தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி ராஜினாமா: தமிழர்களும், தமிழகமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று உருக்கம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா முடிவை எடுத்த அவர், தமிழகமும், தமிழர்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Update: 2019-09-08 00:03 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேகாலயா ஐகோர்ட்டுக்கு அவரை பணியிட மாறுதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ராஜினாமா முடிவை எடுத்த அவர், தமிழகமும், தமிழர்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி வி.கே.தஹில்ரமானி பதவி ஏற்றார். இவர், அமைதியாகவும், மென்மையான வார்த்தைகளையும் கொண்டும் பேசக்கூடியவர் என்று அனைவராலும் புகழப்பட்டார்.

பொதுவாக தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வுதான் பொதுநல வழக்குகளை விசாரிக்கும். ஆனால், பெண்கள், நீர்நிலைகள் தொடர்பான பொதுநல வழக்கை தவிர, பிற வகையான வழக்குகளை தான் விசாரிக்காமல், வேறு டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு ஒதுக்கினார். ஓராண்டாக அவரது பெயர்கள் மீடியாக்களில் பெரிதாக அடிபடவில்லை. தன்னை போலவே, தன் பணியையும் பரபரப்பு இல்லாமல் அமைதியான சூழ்நிலையுடன் மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் மூத்த நீதிபதிகள் குழு கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த, தற்போது இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் வி.ராமசுப்பிரமணியனை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்து தீர்மானம் இயற்றினர்.

அதேகூட்டத்தில், ‘திறமையான நிர்வாகத்துக்காக’ என்று சொல்லி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியை, மேகாலயா ஐகோர்ட்டுக்கும், மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை, சென்னை ஐகோர்ட்டுக்கும் மாற்றுவதாக முடிவு செய்து மற்றொரு தீர்மானத்தை இயற்றினர்.

சென்னை ஐகோர்ட்டு என்பது 1862-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க ஐகோர்ட்டு. இது 3 பழமையான ஐகோர்ட்டுகளில் ஒன்று. இங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றுவதை பெருமையாக கருதுவார்கள். அப்படி பாரம்பரியமிக்க ஐகோர்ட்டில் இருந்து 3 நீதிபதிகள் கொண்ட சிறு ஐகோர்ட்டான மேகாலயா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதி மாற்றப்பட்டார். எனவே, தன்னை மாற்றியதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவுக்கு, வி.கே.தஹில்ரமானி விடுத்த கோரிக்கையும் கடந்த 3-ந்தேதி நிராகரிக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி, ‘இந்த நீதித்துறையை விட்டு நான் செல்கிறேன். என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இந்திய ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன்’ என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதை கேட்டு அங்கிருந்த அனைத்து நீதிபதிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படி ஒரு முடிவை எடுக்காதீர்கள்? என்று அவரை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.

ஆனால், அவர்களுக்கு தலைமை நீதிபதி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ‘இதுநாள் வரை நேர்மையாகவும், மனசாட்சியுடனும் பணியாற்றியுள்ளேன். தற்போது நடக்கும் இந்த சம்பவங்கள் (மேகாலயாவுக்கு மாற்றம்) என் மனதை கடுமையாக பாதித்து விட்டது’ என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாடும், தமிழக மக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் (தமிழக நீதிபதிகள்) உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு என்னை ஒரு சகோதரியாக நினைத்து அழைக்க வேண்டும். நானும் கண்டிப்பாக உங்கள் வீடு தேடி வருவேன்’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.

தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, இந்தியாவில் உள்ள 25 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளில், முதல் மூத்த தலைமை நீதிபதி ஆவார். இவர், 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தற்போது உள்ள ஆர்.பானுமதி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். அப்பதவிக்கு வி.கே.தஹில்ரமானி நியமிக்கப்படலாம் என்று பொதுவாக பேசப்பட்டது. நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளில், வி.கே.தஹில்ரமானியும், கீதா மிட்டல் என்று 2 பெண் தலைமை நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். தற்போது இவர் ராஜினாமா செய்துவிட்டதால், ஐகோர்ட்டு பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் மட்டுமே தற்போது உள்ளார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு வக்கீல்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யும் முடிவை திரும்ப பெறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட்டு முன்பு மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமையில் வக்கீல்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இவரது ராஜினாமா கடிதம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

நாளை (திங்கட்கிழமை) ஐகோர்ட்டில் அவர் வழக்கு களை விசாரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திங்கட்கிழமை விசாரிக்கப்போகும் வழக்குகளின் விவரங்களை கொண்ட பட்டியலை ஐகோர்ட்டு பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியும், நீதிபதி எம்.துரைசாமியும் முதல் அமர்வில் வழக்கு களை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ராஜினாமா கடிதம் அனுப்பிய பின்னர், அவர் வழக்குகளை விசாரிப்பாரா? என்ற கேள்வி வக்கீல்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்