3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு

கூடலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-06 22:45 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வனிதா (வயது 34). இவர்களுக்கு அபித்ஷா (12), அக்‌ஷிதா (10), அனுசியா (8) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வனிதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகனுக்கும், வனிதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வனிதா, தனது 3 பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார். தொடர்ந்து அவரும் விஷம் குடித்தார். இதில் வனிதாவும், அவரது குழந்தைகளும் வீட்டில் மயங்கியநிலையில் கிடந்தனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும், மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் தாய் மற்றும் 3 குழந்தைகளையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு வனிதாவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 3 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு வனிதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் வனிதா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:

வனிதாவின் கணவர் முருகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த வனிதா, கணவரை கண்டித்து வந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு வனிதா தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு முன்பு வனிதா எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் எனது சாவுக்கு கணவர் காரணம் என எழுதி வைத்துள்ளார். இதையொட்டி அவரது கணவர் முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். குடும்ப தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்