பதவி ஆசை காட்டி எங்களை இழுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பதவி ஆசை காட்டி தங்களை இழுக்க முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Update: 2019-09-03 23:45 GMT
சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில், கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கதர் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் கைவினைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சி வருகிற 17-ந் தேதி வரை நடைபெறும்.

கதர் கிராம தொழில்வாரியம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக நுகர்கின்ற ஒரு பழக்கம் பொதுமக்களிடையே ஏற்பட்டால் நிச்சயமாக கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்.

கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை எதிர்த்து எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. கட்சி. தி.மு.க. ஒரு தீய சக்தி என்று உலகிற்கு அவர் அடையாளம் காட்டினார்.

எனவே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் ஒருபோதும் தி.மு.க.விற்கு போகமாட்டார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து யாராவது வருவார்களா? என்று கதவை திறந்து வைத்து கொண்டு, வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்க தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதையாகத்தான் இருக்கிறது.

தி.மு.க.வில் அளிக்கப்படும் பதவிகளுக்காக வேறு கட்சியினர் செல்வார்களே ஒழிய அ.தி.மு.க.வில் இருந்து யாரும் போகமாட்டார்கள். அ.தி.மு.க.வை எப்படியாவது சுவாகா பண்ணிவிடலாமா? என்று தி.மு.க. என்ற திமிங்கலம் வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால், அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், திமிங்கலத்துக்கே விளையாட்டு காட்டி வித்தை காட்டுகிற விலாங்கு மீன். அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு கொள்கை உண்டு, கோட்பாடு உண்டு, நெறி உண்டு.

பதவி கொடுத்து இழுக்க பார்க்கும் மு.க.ஸ்டாலினின் ஆசை நப்பாசையாகத்தான் முடியும். ஆன்லைனில் சினிமா டிக்கெட் விற்பது தவறு அல்ல. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் அரசு பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்