குரூப்-4 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த 2 பேர் சிக்கினர் உடனடியாக வெளியேற்றி கலெக்டர் நடவடிக்கை

கடலூரில் குரூப்-4 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த 2 பேர் சிக்கினர்.

Update: 2019-09-01 22:00 GMT
கடலூர், 

கடலூரில் குரூப்-4 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த 2 பேர் சிக்கினர். உடனடியாக அவர் களை தேர்வு அறையை விட்டு வெளியேற்றி கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

குரூப்-4 தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு கடலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 61 ஆயிரத்து 678 பேர் எழுதினார்கள்.

முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களை தடுப்பதற்காக துணை கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் சோதனை மேற்கொண்டனர்.

2 பேரிடம் செல்போன் பறிமுதல்

அதுமட்டுமின்றி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை கலெக்டர் அன்புசெல்வன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 2 தேர்வர்கள் செல்போன் வைத்திருந்ததை கலெக்டர் கண்டுபிடித்தார். இதையடுத்து செல்போன்களை அவர் பறிமுதல் செய்தார்.

விசாரணையில் கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. வெங்கடேசின் மாமியார் வீடு கடலூரில் இருப்பதால் அவர் இங்கு தேர்வு எழுத விண்ணப்பித்ததாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

நடவடிக்கை

இது குறித்து கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், ‘குரூப்-4 தேர்வு எழுதுவோர் மின்னணு சாதனங்கள், செல்போன், புத்தகம் போன்ற பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி தேர்வு அறைக்குள் 2 பேர் செல்போன் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்