அத்திவரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்கவேண்டும் ஆர்.ஆர்.கோபால்ஜி வேண்டுகோள்

அத்திவரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்கவேண்டும் என்று ஆர்.ஆர்.கோபால்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-08-10 22:15 GMT
சென்னை, 

விஸ்வ இந்து பரிஷத்தமிழ்நாடு அமைப்பின் பொதுச்செயலாளர் ஆர்ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு இதுவரை பார்க்காத ஆன்மிக எழுச்சியாக காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் தரிசனம் அமைந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த புஷ்கரணியில் இருந்து எழுந்தருளி தரிசனம் தரும் அத்திவரதர் இந்த நூற்றாண்டில் முதன்முறையாக கடந்த மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதுவரை 60 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். வருகிற 16-ந்தேதி வரைதான் அத்தி வரதரை தரிக்க முடியும் என்பதால், தினமும் 3 லட்சம் பேர் வரை காஞ்சீபுரத்தில் திரண்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநில மக்கள், வெளிநாடு வாழ் இந்துக்களும் வாழ்நாளில் ஒருமுறையாவது அத்தி வரதரை தரிசிக்கமாட்டோமா என்ற ஏக்கத்தில் காஞ்சீபுரத்துக்கு படையெடுக்கின்றனர்.

வாய்ப்பு கிடைக்காததால் கோடிக்கணக்கான இந்துக்கள் இன்னும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். தரிசன காலத்தை நீட்டிக்கவேண்டும் என்ற யோசனைக்கு வைணவ பெரியவர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஜீயர்கள் பலரிடமும் ஆதரவு பெருகிவருகிறது. அப்படிச் செய்வது எந்த வகையிலும் ஆகம விதி மீறலாக இருக்காது என்றும் ஆன்மிகவாதிகள் தெரிவிக்கின்றனர். கிருஷ்ண பிரேமி போன்ற மூத்த ஆன்மிக பெரியவர்களும் அதையே விரும்புகின்றனர். அத்திவரதரை வெளியில் 48 நாட்களுக்கு மேல் தரிசனத்துக்கு வைக்கக்கூடாது என்று கல்வெட்டு, ஓலைச்சுவடி, வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை என்று தொல்லியல் துறை ஆய்வாளர் டாக்டர் நாகசாமியும் கூறுகிறார்.

108 நாட்கள் நீட்டிக்கவேண்டும்

40 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மக்கள் தொகை அடிப்படையில், 48 நாட்கள் தரிசனம் அப்போது போதுமானதாக இருந்தது. இப்போது உள்ளூர் மட்டுமின்றி உலகம் முழுவதும் அத்திவரதர் பெருமை பரவி உள்ளது. அதை பார்த்து அத்திவரதரை தரிசிக்க இந்துக்கள் புறப்பட்டு ஆன்மிக பூமியான தமிழ்நாடு வருகின்றனர். பக்தி ஆர்வத்தில் இருக்கும் அத்தனை இந்துக்களுக்கும் அத்திவரதர் தரிசனம் கிடைக்கவேண்டும்.

அதற்காக இன்னும் 108 நாட்கள் என்று தரிசன காலத்தை நீட்டிக்கவேண்டும். தரிசனத்தை 108 நாட்களாக நீட்டிக்கும்போது பக்தர்கள் அவரவர் ஊரில் இருந்தே ஆன்லைனில் நாள், நேரம் தேர்வுசெய்து, தரிசனம் முன்பதிவு செய்து, அதன்படி வந்து நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்யும் வாய்ப்பை தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் ஏற்படுத்தித்தர வேண்டும்.

அடிப்படை வசதிகள்

அதேசமயம், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அபிஷேக, ஆராதனை, பூஜை நடைமுறைகளும் தடைபடாமல் தொடர வழி செய்யவேண்டும். லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவ உதவி, இயற்கை உபாதை கழிக்க வசதி போன்ற ஏற்பாடுகள் செய்து தர காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ தனிக்குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால், மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட பணிகளும் தடைபடாது.

இந்துக்களின் இந்த பக்தி மனதை புரிந்துகொண்டு, வைணவ பெரியவர்களும், கோவில் பட்டாச்சாரியார்களும் அதற்கான இசைவை தரவேண்டும். தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் அதற்கான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு நல்க வேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என இந்துக்களிடம் தன்னெழுச்சியாக எழுந்துள்ள அத்திவரதர் ஆன்மிக ஆர்வத்துக்கு எவரும் அணை போடக்கூடாது.

கடைசி பக்தனும் அத்திவரதரை மன மகிழ்ச்சியுடன் தரிசித்து விட்டான் என்ற சாதனையே நமது அரசின் வெற்றியாக இருக்க முடியும்.

இவ்வாறு அதில் ஆர்ஆர்.கோபால்ஜி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்