கர்நாடகாவில் இருந்து கூடுதல் நீரை திறந்து விட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி முழுமையாக நடக்க கர்நாடகா அரசு காவிரியில் இருந்து கூடுதல் நீரை திறந்து விட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சம்பா நெல் சாகுபடி
காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தாமதிப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி பாசன மாவட்டங்களில் 8-வது ஆண்டாக நடப்பாண்டிலும் குறுவை நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாகவும், நீர் இருப்பு 50.50 டி.எம்.சி.யாகவும் உயர்ந்து, செப்டம்பர் மாதத்திலும் நீர்வரத்து நீடித்தால் மட்டும் தான் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்ய முடியும்.
கர்நாடக அணைகளுக்கு வரும் தண்ணீரில் பாதி அளவை காவிரியில் திறந்து விட்டால் அடுத்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி விடும். இம்மாத இறுதிக்குள் நடுவர்மன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதை விட கூடுதலாகவே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கக்கூடும். சம்பா நெல் சாகுபடியையும் வெற்றிகரமாக சாதிக்க முடியும்.
கூடுதல் நீரை திறக்க வேண்டும்
கர்நாடகம் கேரளத்திலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அடுத்த சில வாரங் களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சித்துறை தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தாராளமாக தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போதுவரை தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படவில்லை. இதையெல்லாம் கண்காணித்து தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறக்கும்படி ஆணையிட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதேநிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் பொய்த்துப் போகும்.
எனவே, கர்நாடக அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி முழுமையான பரப்பளவில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.