சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் புகார்: நடவடிக்கை எடுக்காத போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மாயனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Update: 2019-08-08 21:15 GMT
கரூர், 

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆறு பகுதியில் சட்ட விரோதமாக சிலர் மணல் கடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும் வருகின்றனர். இந்தநிலையில் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அமிர்தானந்தா என்பவர், மணல் கடத்தலில் ஈடுபடும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாயனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியனிடம் (வயது 34) புகார் செய்தார்.

ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. சம்பவத்தன்று போலீசில் புகார் செய்த அமிர்தானந்தா வீட்டிற்கு சென்ற மணல் கடத்தலை சேர்ந்த ஒரு கும்பல் அவரை அவதூறாக பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

பணியிடை நீக்கம்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றியும் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியனிடம் புகார் செய் தார். ஆனாலும் நெப்போலியன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து அமிர்தானந்தா திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் செய்தார்.

உடனே டி.ஐ.ஜி. தலைமையிலான போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், மாயனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியனை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. பால கிருஷ்ணன் நேற்று அதிரடி உத்தரவிட்டார். டி.ஐ.ஜி.யின் இந்த அதிரடி நடவடிக்கை திருச்சி சரக போலீசார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்