கோவை - நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு 3 பேர் பலி

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்த பலத்த மழைக்கு 3 பேர் பலியானார்கள்.

Update: 2019-08-08 22:30 GMT
கோவை,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய மழை 4-வது நாளாக நீடித்தது. நேற்று முன்தினம் முதல் விடிய,விடிய பலத்த மழை பெய்தது. ரெயில் நிலையத்தை சுற்றிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை ரெயில் நிலையத்திற்கு பின்புறம் ரெயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனங்களை பார்சல் செய்து வெளியூர்களுக்கு அனுப்பும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை செயல்பட்டு வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் ரெயில்வேக்கு சொந்தமானதாகும்.

சுவர் இடிந்தது

ஈரோட்டை சேர்ந்த பார்சல் கிளார்க் ரகு (வயது 30), கிளார்க் அறை உதவியாளர் காரமடையை சேர்ந்த பவளம் மணி (50), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி இப்ராகிம் (55) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தற்போது கோவை இடையர்பாளையத்தில் வசித்து வரும் ராஜூ (20) ஆகிய 4 பேர் அங்கு பணியில் இருந்தனர். பலத்த காற்று மற்றும் மழை காரணமாக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பார்சல் அலுவலகத்தின் 15 அடி உயரம் உள்ள பக்கவாட்டு சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் பவளம் மணி, இப்ராகிம், ராஜூ ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

இந்த கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்த வழியாக ஏராளமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டதும் அவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2 தொழிலாளர்கள் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய பவளம் மணி, இப்ராகிம், ராஜூ ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முழுவதும் இடிந்து கிடந்ததால் கட்டிங் எந்திரம் மூலம் இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டன.

பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட பவளம் மணி, இப்ராகிம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ராஜூக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சுவர் இடிந்து விழுந்த ரெயில்வே பார்சல் அலுவலகத்தை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடு இடிந்து ஒருவர் சாவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 5-வது நாளாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அவலாஞ்சியில் அதிகபட்சமாக 82 செ.மீ மழை பதிவானது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழையின் காரணமாக குந்தா அணை நிரம்பியது.

மஞ்சூர் அருகே உள்ள பேலிதளா வினோபாஜி நகரை சேர்ந்தவர் சென்னன் (வயது 70), இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. சென்னன் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டு, வீடு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் 2 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஒசா ஆட்டுபாயில் பகுதியில் மணிகண்டன் (52), பிரகலநாதன் (45) என்பவர்களின் வீட்டின் மீது மண்சரிந்து விழுந்தது. இதனால் வீடுகளில் இருந்த மணிகண்டன், பிரகலநாதன் ஆகியோருக்கு பலத்த காயமடைந்தனர்.

மரங்கள் விழுந்தன

மஞ்சூர் பகுதியில் குந்தா பாலம், மஞ்சூர்-ஊட்டியில் நெடுஞ்சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்து. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மஞ்சூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் மழையின் காரணமாக சில்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மஞ்சூர்-ஊட்டி சாலையில் பிக்கட்டி அருகே சிவசக்தி நகரில் உள்ள பாலத்தினை மூழ்கடித்தப்படி வெள்ளம் ஓடியது. அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரியில் நேற்றும் அதிக மழை பெய்ததால், ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ராஜாமணி அறிவித்துள் ளார்.

மேலும் செய்திகள்