அமைச்சர் வேண்டுகோளை ஏற்று மழைநீர் சேகரிப்பு பிரசாரத்துக்கு ஜக்கி வாசுதேவ் ஆதரவு

அமைச்சர் வேண்டுகோளை ஏற்று மழைநீர் சேகரிப்பு பிரசாரத்துக்கு ஜக்கி வாசுதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-08 17:10 GMT
சென்னை, 

மழை நீர் சேமிப்பை சவாலாக எடுத்துக்கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்திருந்தார். ‘மழை நீர் சேமிப்பு பிரசாரத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல அரசியல் சார்பில்லாத பிரபலங்களின் ஆதரவு தரவேண்டும்’, என்று அதில் கூறியிருந்தார்.

இதனை ஏற்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

மழை நீர் சேமிப்பு எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது. நம்மிடம் நீர் வளத்துக்காக இருக்கும் ஒரே ஆதாரம் மழை மட்டுமே. மழை பெய்யும் போது நாம் அதனை பூமிக்குள் சேமித்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் மழைநீரை சேமிக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில், விழிப்புணர்வு இல்லையென்றால், எதிர்காலத்தில் நமது குழந்தைகள் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மழை நீரை சேகரிக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேற்கண்ட தகவல் ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்