பூரண மதுவிலக்கை அமல்படுத்திய மறைந்த முதல்–அமைச்சர்கள் வீடுகளுக்கு குமரி அனந்தன் யாத்திரை 26–ந்தேதி தொடங்குகிறார்
பூரண மதுவிலக்கை அமல்படுத்திய மறைந்த முதல்–அமைச்சர்கள் வீடுகளுக்கு குமரி அனந்தன் யாத்திரை 26–ந்தேதி தொடங்குகிறார்;
சென்னை,
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திய மறைந்த முதல்–அமைச்சர்கள் வீடுகளுக்கு 26–ந்தேதி முதல் குமரி அனந்தன் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மதுவை தீவிரமாக எதிர்த்த சுப்பிரமணிய சிவாவின் நினைவு நாளில் பூரண மதுவிலக்கு வேண்டி நான் மேற்கொள்ள இருக்கும் யாத்திரை திட்டத்தை வெளியிடுகிறேன். அதாவது, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை ஆகியோர் முதல்–அமைச்சர்களாக இருந்த வரை மதுவிலக்கு அமலில் இருந்தது.
எனவே அனைத்து இந்திய மதுவிலக்கு குழு, தக்கர் பாபா வித்யாலயா சமிதி ஆகியோர்களுடன் ஆலோசனை செய்து மேற்கண்ட மறைந்த முதல்–அமைச்சர்களின் ஊர்களுக்கு யாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன்.
அதன்படி வருகிற 26–ந்தேதி ஓமந்தூரில் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் வீட்டுக்கும், 29–ந்தேதி ராஜபாளையத்தில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜா இல்லத்துக்கும், ஆகஸ்டு 5–ந்தேதி தொரப்பள்ளியில் உள்ள ராஜாஜியின் வீட்டுக்கும், 11–ந்தேதி விருதுநகரில் உள்ள காமராஜர் வீட்டுக்கும், 18–ந்தேதி மீஞ்சூரில் உள்ள எம்.பக்தவச்சலம் இல்லத்துக்கும், 25–ந்தேதி காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணாதுரை இல்லத்துக்கும் சென்று அவர்களின் ஆசிகளை பெற்று தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கும் தங்களை போன்ற ஊக்கத்தை பெற ஆன்ம பலத்தை வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள போகிறேன்.
அதைத் தொடர்ந்து அண்ணாவின் பெயரில் ஆட்சியை நடத்தும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து காந்தியடிகளின் 150–வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழ்நாடு காந்தி பேரவை பொதுச்செயலாளர் அடையாறு பாஸ்கர் உடன் இருந்தார்.