சரத்குமார் முயற்சி, உழைப்பால் கட்டப்பட்டது:விருதுநகரில், காமராஜர் மணிமண்டபம் எடப்பாடி பழனிசாமி 15-ந் தேதி திறந்து வைக்கிறார்

சரத்குமாரின் முயற்சி, உழைப்பால் விருதுநகரில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை வருகிற 15-ந்தேதி எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.;

Update: 2019-07-11 20:10 GMT
சென்னை, 

பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான ஆர்.சரத்குமார் கூறியதாவது:-

காமராஜர் மணிமண்டபம்

கர்மவீரர் காமராஜரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைக்கச் செய்யவும், அவருடைய சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடனும் எனது வாழ்வின் ஒரு முக்கிய தருணமும், லட்சியமுமான பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழா வருகிற 15-ந்தேதி காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது.

விருதுநகரில், மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராதிகா சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழில்திபர்கள், துறைசார்ந்த நண்பர்கள் உள்பட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

ஒன்று கூடுவோம்

தேச நலனுக்கான காமராஜரின் சுயநலமற்ற தியாக தொண்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் என்னுடைய முயற்சியினாலும், உழைப்பினாலும் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை அவருடைய பொற்பாதங்களுக்கு சமர்ப்பிக்க உள்ளேன்.

காமராஜர் மணிமண்ட திறப்பு விழாவில் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு, அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்த ஒன்று கூடுவோம் என்று அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்