முதல்-அமைச்சர் மீதான விமர்சனம்: அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனுதாக்கல் செய்துள்ளார்.
மதுரை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திண்டுக்கல் கோர்ட்டில் அரசு வக்கீல் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி ஒரு கொடுமையான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய ஆட்சியை பொறுத்தவரைக்கும் இருக்கக்கூடிய பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பதவி போய்விட்டால் கொள்ளையடிக்க முடியாது, பதவி போய்விட்டால் அமைச்சராக இருக்க முடியாது, ஊழல் செய்ய முடியாது. எனவே அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் தான் ஆட்சி உள்ளது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இன்றைக்கு கொலை பழி சுமத்தப்பட்ட நிலையில் உள்ள ஒரு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எனவே விரைவில் அவர் சிறைக்கு போகக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது‘ என பேசியதாக எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கூறியுள்ளனர்.
ரத்து செய்ய வேண்டும்
என் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. தி.மு.க. மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உள்நோக்கத்துடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்கோர்ட்டு கவனத்தில் கொள்ளத்தவறிவிட்டது. பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவை இருப்பதையும் கீழ்கோர்ட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
எனவே என் மீதான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதுடன், வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.