கற்பழிப்பு வழக்கில் கைதான முகிலன் கரூர் கோர்ட்டில் ஆஜர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.;
கரூர்,
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முகிலன் (வயது 52). கடந்த 5 மாதங்களாக மாயமான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டார். அவரை சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி, முகிலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி அவருடன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற பெண் ஒருவர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அந்த கற்பழிப்பு வழக்கில் கடந்த 7-ந்தேதி அவர் கைது செய்ப்பட்டார்.
கரூர் கோர்ட்டில் ஆஜர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலன், சென்னை கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 10-ந்தேதிக்குள் (நேற்று) கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாலையில் இன்ஸ்பெக்டர் திலகாதேவி உள்பட கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் இருந்து முகிலனை கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக வேனில் அழைத்து வந்தனர். பின்னர் அழைத்து வர நேரமானதால், கரூர் கோர்ட்டு வளாகத்தின் பின்புறமுள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண்-2 நீதிபதி விஜயகார்த்திக் முன்பு அவரது வீட்டில் வைத்து ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இரவில் நடந்தன.
நேற்று அதிகாலை 2 மணியளவில் கரூர் சி.பி.சி.ஜ.டி. போலீசார் முகிலனை, நீதிபதி விஜயகார்த்திக் முன்பு ஆஜர்படுத்தினார்கள். அப்போது, தான் 4 நாட்களாக தூங்கவில்லை எனவும், 10-ந்தேதி காலை ஆஜர்படுத்துவதாக கூறிவிட்டு இரவோடு இரவாக அழைத்து வந்து விட்டனர் என கூறி நீதிபதியிடம் முகிலன் முறையிட்டார்.
திருச்சி சிறையில் அடைப்பு
இதையடுத்து முகிலனை வருகிற 24-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த முகிலன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரியின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினார். பின்னர் 2.30 மணியளவில் அங்கிருந்து வேனில் அழைத்து செல்லப்பட்ட முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முகிலன் சிறை மருத்துவமனையில் அனுமதி
முன்னதாக முகிலனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, அவர் நீதிபதியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி இருந்தார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட முகிலனை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.