சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்கப்படுமா? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

Update: 2019-07-09 23:25 GMT
சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), சாலையோரமாக வசிக்கும் மக்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பை கொண்டு வந்தார்.

இதேபோல், தி.மு.க. உறுப்பினர் ரவிச்சந்திரன் (எழும்பூர்) பேசும்போது, ‘எழும்பூர் தொகுதியில் 77-வது வட்டத்தில் 864 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, அவற்றுக்கு இன்னும் கழிவுநீர், மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். எனவே மழைக்காலத்திற்கு முன்பு அவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட வேண்டும். பி.கே.காலனியில் 1, 3, 9 பிளாக்குகளில் உள்ள வீடுகள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல் இருக்கிறது. எனவே அந்த வீடுகளை ஆய்வு செய்து, பழுதடைந்த வீடுகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் 15 லட்சம் ஏழைகளுக்கு, ரூ.75 ஆயிரம் கோடி செலவில் வீடு கட்டும் பணிகள் திட்டமிடப்பட்டு, தற்போது 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வீடு இல்லை என்று கூறினார். அவர்களுடைய இருப்பிட சான்றிதழ் உறுதி செய்யப்பட்டு, படிப்படியாக வீடு கட்டிக்கொடுக்க பரிசீலிக்கப்படும்.

எழும்பூர் பகுதியில் உறுப்பினர் குறிப்பிட்ட இடங்களில் பணிகள் தீவிரப்படுத்தப்படும். குடியிருப்புகள் பழுதடைந்து இருந்தால், அதனை இடித்து விட்டு 400 சதுர அடியில் புத்தம் புதிய வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்காக வல்லுனர் குழுவை அனுப்பி, ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்