கடல் அலையில் சிக்கி சாவு: 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கடல் அலையில் சிக்கி சாவு, 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2019-07-09 22:34 GMT
சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், லெட்சுமிபுரம் கிராமம், மண்டைக்காடு புதூர் என்னுமிடத்தில் 16.6.2019 அன்று புதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி சகாய ரெகின், இன்பென்டர் ரகீட், சச்சின் ஆகிய 3 சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்