பெரும் கடன் பத்திர ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை கட்டணம் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் சட்டசபையில், அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு

பெரும் கடன் பத்திர ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை கட்டணம் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் சட்டசபையில், அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்புகளை வெளியிட்டார்.

Update: 2019-07-09 21:15 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற வணிக வரிகள் மற்றும் பத்திரபதிவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

* எட்டயபுரம், மணப்பாறையில் செயல்படும் மாநில வரி அலுவலர்களின் அலுவலகங்களுக்கு ரூ.2 கோடியே 27 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா பவளவிழா நினைவு ஒருங்கிணைந்த வணிக வரி கட்டிடத்தில் வணிக வரி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடம் 35 ஆண்டுகள் பழமையானவை என்பதால் ரூ.5.84 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* காரைக்குடி, விருத்தாசலத்தில் தலா ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்படும்.

* பெரும் கடன் பத்திர ஆவணங்களை பதிவு செய்யும்போது அரசின் வருவாயை பெருக்கிட ஆவணங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றின் உச்சவரம்பு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் என்று நிர்ணயிக்கப்படும்.

* அரசு அங்கீகாரத்துடன் புதுப்பிக்கப்பட்ட முத்திரை மற்றும் பதிவு சட்ட கையேடுகள் வெளியிடப்படும்.

* காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதிப்பு நிர்ணயம் செய்யும் பொருட்டு அதிகளவில் ஆவணங்கள் நிலுவையாக உள்ளதால், பொதுமக்கள் பதிவு செய்த தங்களது ஆவணங்களை திரும்ப பெறுவதை விரைப்படுத்துவது அவசியம் ஆகிறது. எனவே காஞ்சீபுரத்தில் புதிதாக தனித்துணை ஆட்சியர்(முத்திரை) பணியிடம் உருவாக்கப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்டார்.

மேலும் செய்திகள்