சென்னையில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

சென்னையில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

Update: 2019-07-08 05:23 GMT
சென்னை,

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 57 ஆயிரத்து 804 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 31 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் தகுதியுடையவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் மாணவர்கள் 11 ஆயிரத்து 741 பேரும், மாணவிகள் 19 ஆயிரத்து 612 பேரும் அடங்குவார்கள். விண்ணப்பித்தவர்களில் 17 ஆயிரத்து 618 பேர் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரத்து 651 விண்ணப்பங்கள் தகுதியுடையவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் மாணவர்கள் 9 ஆயிரத்து 366 பேரும், மாணவிகள் 16 ஆயிரத்து 285 பேரும் அடங்குவர். விண்ணப்பித்தவர்களில் 14 ஆயிரத்து 387 பேர் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.  அதன் பின்னர் நாளை முதல் பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்