சென்னையில் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னையில் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.
சென்னை,
நீட் தேர்வு முடிவு கடந்த ஜூன் 5ந்தேதி வெளியானதும், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 7ந்தேதி முதல் 20ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், மாணவ- மாணவிகள் தங்களுடைய சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
மருத்துவ படிப்பு இடங்களுக்கு மொத்தம் 68 ஆயிரத்து 20 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். அதை சரிபார்த்து தரவரிசை பட்டியல் தயாரானது. இந்த பட்டியல் இன்று காலை வெளியானது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதில், திருவள்ளூர் மாணவி ஸ்ருதி முதலிடம் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற நிலையில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளார்.
தரவரிசை பட்டியல் வெளியானதும், 8ந்தேதி (நாளை மறுதினம்) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 9ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.