ரூ.25 கோடி செலவில் சிட்லபாக்கம் ஏரி சீரமைப்பு : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சிட்லபாக்கம் ஏரி ரூ.25 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவை விதி எண் 110-ன் கீழ் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பயன்பாட்டில் உள்ள சொந்தக் கிடங்குகளின் கொள்ளளவினை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் உணவு தானியங்களை இருப்பு வைப்பதற்கான தேவையினை கருத்தில் கொண்டும், கூடுதலாக 36 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 28 கிடங்குகள் பல்வேறு இடங்களில் ரூ.59.40 கோடி மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மூலம் காய்கறிகள், புளி, பழங்கள், பருப்பு வகைகள், பூக்கள் மற்றும் இதர விவசாய பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்திட 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் சூரிய மின் சக்தியுடன் இயங்கக்கூடிய குளிர்சாதனக் கிடங்கு, நடப்பு நிதியாண்டில் அமைக்கப்படும்.
சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கட்டிடம், மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கிடும் பொருட்டு, ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும். தரமான நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்கிடவும், பண்டகசாலைகளின் இதர சேவைகளை பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு அளித்திடவும், அரியலூர், புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மண்டலங்களில் 5 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் புதிதாக தொடங்கப்படும்.
ஒரு புதிய முயற்சியாகவும், நியாயவிலைக் கடைகளின் குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையிலும், மாநிலம் முழுவதும் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் 103 நியாயவிலைக் கடைகளில் திறக்கப்பட்டன. இவ்வாறு திறக்கப்பட்ட கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சீரிய திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், ரூ.5.82 கோடி செலவில் புதிதாக துவக்கப்படும்.
புலிகள் காப்பகங்கள் சுற்றுலா பயணிகளுக்கு வன உயிரினங்களை பார்ப்பதற்கும், மலையேற்றம் செய்வதற்கும், வனத்தின் இயற்கையை ரசிப்பதற்கும் அரிய சந்தர்ப்பங்களை வழங்கி வருகிறது. வன உயிரினங்களைப் பற்றியும், வனத்தினுடைய பயன்பாடுகளைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக களக்காடு - முண்டந்துறை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய புலிகள் காப்பகங்களில் கல்வி, ஒலி - ஒளித்தகவல் கருத்து விளக்கக் கூடத்துடன் 3 கலை நயம் மிக்க சிறு கூட்ட அரங்கங்கள் தலா ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் நிறுவப்படும்.
வன வளங்களை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறையில் 1,119 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வனத்திற்குள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வனவளங்களை காக்கும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, பணிபுரிந்து வருவதால் அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக கடந்த ஆண்டுகளில் சென்னை சேத்துப்பட்டு ஏரி, ஆவடி பருத்திப்பட்டு ஏரி மற்றும் மாதவரம், அம்பத்தூர், கொரட்டூர் ஏரிகள் மறுசீரமைக்கப்பட்டன. தற்போது அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, நடப்பாண்டில் காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஏரியில் சூழல் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
219 ஏக்கர் விவசாய நிலங்களை ஆயக்கட்டு பரப்பாகக்கொண்டது சிட்லபாக்கம் ஏரி. ஆனால், தற்போது அந்த ஏரி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிட்லபாக்கம் ஏரியை சீரமைக்கும் பொருட்டு, ஆக்கிரமிப்பை அகற்றுதல், மண் திட்டுகளால் குறைந்துள்ள நீரின் கொள்ளளவினை அதன் உச்ச கொள்ளளவிற்கு மீளச் செய்தல், ஏரிக்கரையினை பலப்படுத்துதல், உபரி நீர் வீணாவதை தவிர்த்தல், உபரிநீர் தடுப்புச்சுவர் வசதிகளை மீண்டும் ஏற்படுத்துதல், வெள்ள நீரை வடிகால்கள் மூலமாக திருப்புதல், கழிவுநீரை தடுப்பாண்களை ஏற்படுத்தி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்புதல் போன்ற பணிகள் ரூ.25 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.