பெரியார் வழியில் வந்தவன்: ஆயுள் தண்டனை என்றாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் - வைகோ பேட்டி
தேசத்துரோக வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை சிறப்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை,
விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற எண்ணத்தை தொடர்ந்து இளைஞர்களிடம் விதைத்து கொண்டிருப்பதால் இந்த தண்டனையை அளிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருக்கிறார். ஆம், விதைப்பேன். விதைத்துக்கொண்டே இருப்பேன். ஆயுள் தண்டனை என்றாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தந்தை பெரியாருக்கு 1938-ம் ஆண்டு சென்னை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் நீதிபதியை பார்த்து, ‘அதிகபட்ச தண்டனை எதுவோ அதை கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார். தீர்ப்பை கேட்டவுடன் மகிழ்ச்சியோடு 3 வருடம், 3 வருடம் என்று அவர் சத்தம்போட்டுக்கொண்டே சென்றதாக படித்து இருக்கிறேன்.
நான், தந்தை பெரியார் வழியில் வந்தவன். 1938-ம் ஆண்டு தந்தை பெரியார் சொன்னதை, அவரது பேரனான நான், இன்று நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறேன்.
நான் பேசியது தேசத்துரோகம் அல்ல. இது தேசத்துரோகம் என்றால், அதை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.