அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு

தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

Update: 2019-07-02 12:02 GMT
சென்னை,

அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தின சபாபதி ஆகியோர்  டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 3 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அறந்தாங்கி சட்டமன்ற  உறுப்பினர் ரத்தின சபாபதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.  ரத்தின சபாதி முதல்-அமைச்சரை சந்திக்கும்போது அருகில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

தினகரன் ஆதரவாளர்களாக இருந்து வந்த செந்தில் பாலாஜி அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து தற்போது எம்.எல்.ஏ ஆக உள்ளார். அவரை தொடர்ந்து தினகரனின் விசுவாசி என கூறப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதனையடுத்து  அதிமுகவில் என்னை அடையாளம் காட்டியது தினகரன் அல்ல, என்னை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா, தினகரன் ஏன் தவறாகவே பேசுகிறார் என தெரியவில்லை. பாஜக மற்றும் திமுகவில் இருந்து அழைப்பு வந்தது, உடன் இருந்தவர்கள் விருப்பத்தின் பேரில் அதிமுகவில் இணைகிறேன்  என்று இசக்கி சுப்பையா கூறினார்.

தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் என டிடிவி.தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்