காஞ்சீபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசன திருவிழா கோலாகலமாக தொடங்கியது
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரம்,
வைணவத்தலங்களில் உலகப்புகழ் பெற்று விளங்கும் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. இந்த கோவிலில் இருந்த ஆதி அத்திவரதர், கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில், தண்ணீருக்கு அடியில் எழுந்தருளி உள்ளார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் திருவிழா நேற்று காலை தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வரை விழா நடக்கிறது. விழாவையொட்டி அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதருக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அத்திவரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டது. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் நேற்று காலை 6 மணி முதல் அத்திவரதர் காட்சி தரத்தொடங்கினார். முதல் 24 நாள் சயன (படுத்த) கோலத்தில் (நேற்று முதல் 24-ந்தேதி வரை) அத்திவரதர் காட்சி தருவார். அடுத்த 20 நாட்கள் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்.
விழாவையொட்டி வசந்த மண்டபம் முழுவதும் வண்ண வண்ண மலர்களை கொண்டும், பழங்களை கொண்டும் தெய்வீக மணம் பரப்பும் வகையில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அத்திவரதருக்கு உடல் முழுவதும் தைலகாப்பு தடவப்பட்டு மணம் கமழும் வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓத கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் அர்ச்சகர்கள் சுப்ரபாதம் பாடினர். இதனையடுத்து அத்திவரதருக்கு லட்டு, சர்க்கரை பொங்கல், பாயாசம், பாதாம் அல்வா, பால்கோவா, கேசரி, வடை, முந்திரி கேக் உள்பட பல்வேறு இனிப்பு பலகாரங்கள், பழ வகைகள் படைக்கப்பட்டது.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் குடும்பத்துடன் அத்திவரதரை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் கவர்னருக்கு பிரசாதம் வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
கவர்னருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அத்திவரதரை தரிசிக்க கோவில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசிக்க சென்றபோது, பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பினார்கள்.
கோவில் வளாகத்தை சுற்றி பக்தர்களுக்கு போதுமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதார வசதி உள்பட அனைத்து வசதிகளையும் மாவட்ட கலெக்டர் பொன்னையா செய்திருந்தார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் அத்திவரதரை தரிசிக்க பேட்டரி கார்கள், 3 சக்கர வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. அதன் மூலம் அவர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சீபுரம் நகரத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால், உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் பல்லாயிரக்கணக்கானோர் அத்திவரதரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டு ரூ.50 கட்டணத்தில் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்கி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஆன்லைன் மூலம் ரூ.500-க்கான சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவும் நடந்து வருகிறது.
அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். கோவில் வளாகத்தில் மருத்துவமுகாம் அமைக் கப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. கோவில் வெளியே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம் : சிறப்பு நுழைவு கட்டணத்தில் ரூ.8½ லட்சம் வசூல்
அத்திவரதர் தரிசனம் தொடங்கிய முதல் நாளான நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் கோவிலில் குவிந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அத்திவரதரை மனமுருகி தரிசனம் செய்து சென்றனர். முதல் நாளான நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ரூ.50 சிறப்பு கட்டணம் மூலம் நேற்று ரூ.8½ லட்சம் வசூலாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.