போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் சில மணி நேரங்களில் வாபஸ் பெறப்பட்டது.
நாமக்கல்,
தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளின் பணி ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அனைத்து லாரிகளுக்கும் பணி வழங்கக்கோரி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என 6 மாநிலங்களில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றிச் செல்லாமல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், காஷ்மீர் மாநில ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமாரை மத்தியஸ்தராக நியமித்து, உறுப்பினர்களின் குறைகளை கேட்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
இதை கேட்ட சங்கத்தின் வக்கீல்கள் சுந்தரேசன், பிரசாத் ஆகியோர் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் உத்தரவாதம் அளித்தனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நாமக்கல்லில் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் நிருபர்களிடம் கூறும்போது, “காஷ்மீர் மாநில ஓய்வுபெற்ற நீதிபதி பால்வசந்தகுமார் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே நாங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டோம். பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்” என்றார்.
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கிய சில மணி நேரங்களில் வாபஸ் பெறப்பட்டதால், லாரி உரிமையாளர்கள் மீண்டும் பணியை தொடங்கி உள்ளனர்.