ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை; அ.தி.மு.க. அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை குறித்து அ.தி.மு.க. அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை குறித்து அ.தி.மு.க. அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என கூறினார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். சென்னையில் குடிநீர் தேவையை எதிர்கொள்ள, ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கேள்வி-பதில் வடிவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இந்தியாவின் 6வது பெரிய நகராக சென்னை விளங்குகிறது. அப்படிப்பட்ட முக்கியமான நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நகரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் ஏற்பட்டது. தற்போது தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு என்ன காரணம்?
இதற்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், வித்தியாசமான அதிகாரத்துவம் ஆகியவையே காரணம். மக்கள் அதிக சுயநலமும், கோழைத்தனமான எண்ணமும் கொண்டுள்ளனர். புதுச்சேரியை பாதுகாக்க நாம் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். இல்லையென்றால் சென்னை போன்ற நிலைமை புதுச்சேரிக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
அவரது பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி கருத்து வெளியிட்டதை ஏற்க முடியாது என கூறியுள்ளார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்கள் பெயர்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.