கொலை செய்யப்பட்ட புகைப்படக்காரரின் காதலி தீக்குளித்தார்

நாகர்கோவிலில் கொன்று எரிக்கப்பட்ட புகைப்படக்காரரின் காதலி தீக்குளித்தார்.

Update: 2019-06-08 21:30 GMT
நாகர்கோவில், 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் தெருவை சேர்ந்த புகைப்படக்காரர் ரெசி (வயது 33). இலங்கை அகதியான இவர், வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

ரெசியின் நண்பர் குமரி மாவட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் கேத்தீஸ்வரன் ஆவார். இவரும் இலங்கை அகதிதான். கேத்தீஸ்வரன் வீட்டுக்கு ரெசி அடிக்கடி சென்று வருவார். அப்போது கேத்தீஸ்வரனின் அக்காளுக்கும், ரெசிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கொன்று எரிப்பு

இந்த விவரம் கேத்தீஸ்வரனுக்கு தெரிய வரவே அவர் ரெசியை கண்டித்தார். ஆனாலும் ரெசி கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கேத்தீஸ்வரன் ரெசியை கொலை செய்துள்ளார். பின்னர் தன்னுடைய நண்பர்களான சுசீந்திரம் சன்னதி தெருவைச் சேர்ந்த பழனி (26), பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த முகமது பைசல் (25) ஆகியோருடன் சேர்ந்து ரெசியின் உடலை நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரித்துள்ளார்.

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேத்தீஸ்வரன், பழனி, முகமது பைசல் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

காதலி தீக்குளித்தார்

இதற்கிடையே ரெசி கொலை செய்யப்பட்ட விவரம் கேத்தீஸ்வரனின் அக்காள் அனுஷாவுக்கு தெரிய வந்தது. அவர் மனம் உடைந்து வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததாக தெரிகிறது.

நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி அனுஷா தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அனுஷாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனுஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சை

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அனுஷாவின் உடலில் 70 சதவீதம் தீக்காயம் இருப்பதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்