பா.ஜ.க.வுடன் இன்றும், என்றும் நட்பு தொடரும் அ.தி.மு.க. நாளேட்டில் கட்டுரை
பா.ஜ.க.வுடன் இன்றும், என்றும் நட்பு தொடரும் என்று அ.தி.மு.க. நாளேட்டில் கட்டுரை வெளியானது.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பின்னடைவை சந்திந்தன. தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை காரணமாகவே இந்த கூட்டணி சோபிக்கவில்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
எனவே அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் என்றும், பா.ஜ.க.வை கூட்டணியில் இருந்து கழட்டி விட அ.தி.மு.க. திட்டம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இன்றும்.., என்றும்..,
இந்தநிலையில் கூட்டணியில் விரிசலா? என்பதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அ.தி.மு.க.வின் ‘நமது அம்மா’ நாளேட்டில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது நட்பின் நீட்சியாக நாடாளுமன்ற தேர்தலில் மலர்ந்தாலும் தேசபக்தி, இறை வழிபாடு போன்ற பிரதான நோக்கங்களில் ஓர் குரலாக ஒலிக்கின்ற இயக்கங்கள். அரசியலை கடந்து அப்பழுக்கில்லா நட்புணர்வை 2 தலைமைகளும் இன்றும், என்றும் தொடர்கின்ற அமைப்புகள்.
பெற்ற வெற்றிக்கும், அடைந்த தோல்விக்கும் எவையெல்லாம் காரணங்கள் என்பதை உள்ளச்சுத்தியோடு ஒளிவு மறைவின்றி அலசி, எதிர்காலத்தை வெற்றிப் பாதைக்கு திருப்பிட இரண்டு இயக்கங்களும் முன்னெடுக்கும் முனைப்புகளை, முன் வைக்கும் விவாதங்களை எல்லாம் விரிசல், இடைவெளி, பிளவு என்பதாக சில இலவு காத்த கிளிகளும், அவர்களுக்கு உளவு பார்க்கும் எலிகளும், ஊதி பெரிதாக்கும் புலிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு அலசுவதை பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது.
வெற்றி தோரணம்
நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி வெற்றியாயினும் சரி, இடைத்தேர்தலில் ஈட்டிய 9 தொகுதி வெற்றியாயினும் சரி, இவை இரண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தந்த மதிப்பீடு என்பதை மனதார ஏற்றுக்கொண்டு அல்லதை அகற்றி, நல்லதை பெருக்கி, எதிர்காலத்தை வெற்றிகளின் தோரணமாக்க நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு இவர்கள் என்ன தான் திட்டமிட்டாலும் அணைபோட முடியாது.
ஆனாலும், ‘மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு என்றெல்லாம் பொய் செய்திகளை மக்களிடம் பரப்புகிற இவர்களின் உண்மை நோக்கம் யாது என்பதை உலகம் புரிந்து கொள்ள தொடங்கி விட்டது’ என்பது மட்டும் உண்மை.
100 ஆண்டுகள்
கடமையாற்றுபவனுக்கு தலைமேல் சுமை. வழிப்போக்கர்களுக்கு வெறும் வாய்செலவு மட்டும் தான். அதனால், உள்நோக்க கும்பலின் ஊளைகளை ஒதுக்கிவிட்டு, இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. தான் தமிழ் மண்ணை ஆளும் என்கிற நம் கருணைத் தாயின் கடைசி சூளுரையை ஆளும் என்கிற நம் கருணை தாயின் கடைசி சூளுரையை கடுகளவும் குன்றாமல் நிறைவேற்ற கடமையை பெருக்குவோமே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.