‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு டீன் தகவல்
‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்தார்.;
சென்னை,
கேரளாவில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இதில் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களால் ‘நிபா’ வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சோதனை சாவடிகளில் தமிழக அரசு சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
தனி வார்டு
தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிக நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-
மருத்துவக்குழு
தமிழக சுகாதாரத்துறை உத்தரவின்பேரில் ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக 2 மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள்.
தற்போது வரை 7 அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேவை அதிகமானால் ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேலும் பல அறைகள் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.