நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை திருவள்ளூர் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், ஷீலாதேவி என்பவர் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில், ‘திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் தனியார் நிர்வாகம் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி விற்பனை செய்துவருகிறது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், ஷீலாதேவி என்பவர் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில், ‘திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் தனியார் நிர்வாகம் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி விற்பனை செய்துவருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிதண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இரவு நேரங்களில் பல கி.மீட்டர் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலைக்கு எங்கள் பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் தனியார் நிறுவனங்களில் 24 மணி நேரமும் லாரி, லாரியாக நிலத்தடி நீரை உறிஞ்சி கேன்களில் சப்ளை செய்து வருகின்றனர். நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர், பூந்தமல்லி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவது, திருடுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த உத்தரவின் அடிப்படையில் நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 10–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.