15 டன் குப்பைகளை அகற்றிய 19 ஆயிரம் தன்னார்வலர்கள் நீர்நிலைகள், கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தனர்

2 மணி நேரத்தில் 7 நகரங்களில் 19 ஆயிரம் தன்னார்வலர்கள் 15 டன் குப்பைகளை அகற்றி நீர்நிலைகள், கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தனர்.

Update: 2019-06-04 22:15 GMT
சென்னை, 

நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. காலம் காலமாக அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முக்கியமான தினங்களை, குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும் நினைவுபடுத்தி ஊர்வலம், கோஷம், கூட்டம் என நடத்திவிட்டு மறுநாள் நம் வழக்கமான வேலைகளை பார்க்க புறப்பட்டு விடுகிறோம். இப்படி செய்வது, மற்ற தினங்களுக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம்.

ஆனால், உலக சுற்றுச்சூழல் தினத்தை பொறுத்தமட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தினமும் விழிப்புணர்வுடன் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இன்று(ஜூன் 5-ந் தேதி) உலக சுற்றுச்சூழல் தினம். ‘இன்னொரு தினத்தை போன்று இதை கடைபிடிக்க மாட்டோம். எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் தினமாகவே இதை கடைபிடிப்போம். இந்த நாள் மட்டும் அல்ல...ஆண்டு முழுவதும் இந்த தினத்தை போற்றும் வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தோடு கடந்த 12 ஆண்டுகளாக சத்தமில்லாமல் தனது பணியை ‘என்வைரான்மென்டலிஸ்ட் பவுன்டேசன் ஆப் இந்தியா’(இ.எப்.ஐ.) என்ற அமைப்பு செய்து வருகிறது.

19 ஆயிரம் தன்னார்வலர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உள்ளார்ந்த ஈடுபாடு கொண்ட இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து இந்த அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடந்த 2-ந்தேதி இந்த அமைப்பு சென்னை, கோவை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் ‘பூமிக்கான தன்னார்வலர்கள்’ என்ற பெயரில் நீர்நிலை மற்றும் கடற்கரை பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட 19 ஆயிரம் தன்னார்வலர்கள் இந்த களப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஆச்சரியப்பட வைத்துள்ளனர். கையில் கிடைத்த எந்த குப்பையையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

15 டன் குப்பை அகற்றம்

அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை வெறும் 2 மணி நேரத்தில் 7 நகரங்களிலும் 15 டன் குப்பையை சேகரித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

சென்னையை பொறுத்தமட்டில் புரோக்கன் பிரிட்ஜ், அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் 3,900 தன்னார்வலர்கள் 6 டன் குப்பைகளை அகற்றி உள்ளனர். கோவையில் கிருஷ்ணம்பதி ஏரி, முத்தன்னன் குளம் ஆகியவற்றிலும், புதுச்சேரியில் வீராம்பட்டினம் கடற்கரை, கானகன் ஏரி ஆகியவற்றிலும் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

‘இதோடு எங்கள் பணி நின்றுவிடப்போவதில்லை. என்றென்றும் இந்த பணி தொடரும்’ என்கிறார்கள் தன்னார்வலர்கள். இவர்களை போன்றவர்களால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கையுடன் இதுபோன்றவர்களை ஆண்டு முழுவதும் வார இறுதி நாட்களில் இந்த பணியில் ஈடுபடுத்தி வருகிறது இ.எப்.ஐ. அமைப்பு.

நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

இந்த சமூகப்பணி குறித்து ‘என்வைரான்மென்டலிஸ்ட் பவுன்டேசன் ஆப் இந்தியா’(இ.எப்.ஐ.) அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பல்வேறு காரணிகளில் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. உலகத்தையே அச்சுறுத்தும் பிரச்சினையாக இது உருவெடுத்து வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசு, கடல் வளம், மண் வளம், நிலத்தடி நீர்மட்டத்துக்கு பாதிப்பு, வனவிலங்கினங்களுக்கு ஆபத்து என்பது தொடர்கிறது.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகி பூமிப்பந்தை அசுத்தமாக்கி வருகின்றன.

ஆண்டுதோறும் அதிகரிப்பு

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் இந்த பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். இந்த பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தங்களது முழு விருப்பத்தின் பேரிலேயே தங்களை இந்த பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சமூகப்பணியில் பங்கெடுத்து வருகின்றனர். நாங்களும் பள்ளி, கல்லூரிகளை தொடர்பு கொண்டு மாணவ-மாணவிகளை இந்த பணியில் ஈடுபடுத்த வலியுறுத்துகிறோம். பல கல்வி நிறுவனங்கள் இந்த பணிக்கு துணையாக இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் அரசு எந்திரமும் இந்த பணிக்கு முழுமையான ஆதரவை அளித்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த 360 தூய்மை பணியில் 57 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த சமூகப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

சமூகப்பணி தொடரும்

பல இடங்களில் தமிழக அரசு தடை விதித்த பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக தேங்கி கிடந்ததை பார்க்க முடிந்தது. இதுதவிர மக்காத பொருட்களான ஆணுறை, காலி பாட்டில்கள், நைலான் கயிறுகள், பேட்டரி செல்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், தெர்மோகோல் அதிகமாக கிடந்தன. நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இந்த குப்பைகளை அங்கிருந்து அகற்றி குப்பை கிடங்கில் தான் கொட்டி வருகிறோம். மறுசுழற்சி செய்வதற்கான வசதி இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிந்தித்து செயல்படும்வரை எங்களது சமூகப்பணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்