ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-06-03 22:00 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் ரெயில்வேகேட் பகுதியில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தண்டவாளம் அருகே ஸ்கூட்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த ஸ்கூட்டர் யாருக்கு சொந்தமானது? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காதல் ஜோடி

விசாரணையில், அந்த ஸ்கூட்டர் நீடாமங்கலம் அருகே உள்ள பழங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் ராகுல்பிரியன்(வயது 21) என்பவருக்கு சொந்தமானது என்பதும், இறந்து கிடப்பது அவர் தான் என்பதும் தெரிய வந்தது. மேலும் அங்கு இறந்து கிடந்த பெண், காளாச்சேரி மாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் 2-வது மகள் வினிதா(20) என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

பிணமாக கிடந்த வினிதாவின் கையில் ராகுல் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது ராகுல்பிரியன், வினிதா ஆகிய இருவரும் காதல் ஜோடி என்பதும், இருவரும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

திருமணம்

வினிதாவின் அக்காவுக்கும், பழங்களத்தூரை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது பழங்களத்தூருக்கு வினிதா சென்றபோது அந்த ஊரை சேர்ந்த ராகுல்பிரியனுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வினிதா வேலை பார்த்து வந்தார்.

நேற்று அதிகாலை மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நீடாமங்கலம் வந்த வினிதாவை, ராகுல்பிரியன் ஸ்கூட்டரில் வையகளத்தூர் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் இருவரும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வையகளத்தூர் ரெயில்வே கேட் கீப்பர் தெரிவித்த தகவலின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

பிரேத பரிசோதனை

காதல் ஜோடியின் உடல்களை தஞ்சை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்