ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளில் சோகம்

பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளிலேயே ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலியானார்கள்.

Update: 2019-06-03 21:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். விவசாயி. இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகன்கள் பரணிதரன்(வயது 9), தரணிதரன்(9).

அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்-நந்தினி தம்பதியரின் மகன் பூவரசன்(9). இவர்கள் 3 பேரும் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். கோடை விடுமுறைக்கு பின் நேற்று காலையில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. 4-ம் வகுப்புக்கு செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் 3 பேரும் புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்றனர்.

3 பேரும் பலி

மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும், 3 பேரும் தங்களது வீட்டிற்கு புவனகிரி-குறிஞ்சிப்பாடி சாலையில் நடந்து சென்றனர். அப்போது வழியில் இருந்த சாத்தப்பாடி ஏரியில் தண்ணீர் கிடந்ததை கண்டதும், 3 பேரும் ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட 3 பேரும் நீச்சல் தெரியாமல் தத்தளித்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதற்கிடையில் பள்ளிக்கூடத்திற்கு சென்றவர்கள், மாலை 6.45 மணி வரையிலும் வீட்டிற்கு வராததால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்தனர். உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் தேடிச்சென்றனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் புத்தகப்பை மற்றும் ஆடைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏரியில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் ஏரியில் இறங்கி தேடிப்பார்த்தனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்குப்பிறகு அடுத்தடுத்து 3 மாணவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர்.

தம்பதி கதறல்

மணிவேலுவிற்கும், சிவகாமிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு முதல் பிரசவத்திலேயே பரணிதரன், தரணிதரன் ஆகிய இரட்டைக்குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவர்கள் வேறு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. ஏரியில் மூழ்கி இரட்டையர் பிணமாக மீட்கப்பட்டதை கண்டு மணிவேலும், சிவகாமியும் கதறி அழுதது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இது குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்