கோடை விடுமுறை முடிந்தது: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
சென்னை,
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை ஆகிய காரணங்களால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவின. இதனால் மாணவர்கள்-பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு, திட்டமிட்டப்படி ஜூன் 3-ந்தேதி (இன்று) பள்ளிகள் திறக்கப்படும்’ என்று அறிவித்தார்.
அதன்படி 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியவுடனேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளி கல்வி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படும். அதே வேளையில், ஒரு சில தனியார் பள்ளிகள் வருகிற 7-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை), சில தனியார் பள்ளிகள் 10-ந்தேதியும் (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.